✨ புத்தகம்: சில நேரங்களில் சில மனிதர்கள்
✨ எழுத்தாளர்: ஜெயகாந்தன்
✨ வெளியீடு: 1971, மீனாட்சி புத்தக நிலையம்
✨ பக்கம்: 447
✨ விலை: 300
✨ விருது: சாகித்திய அகாதமி
Blogpost by Dhanu
4.8/5
சில புத்தகங்களை வாசிக்கையில் மட்டுமே நம் ஊர் வாசனை வீசும், சக மனிதர்களோடு உறவாடுவது போன்று இனிதாக இருக்கும். ஒரு கதாபாத்திரத்தை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு ஒரு நடிகனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு வாசகனுக்கும் கிடைக்கும் அளாதியான பரிசு. அவ்வண்ணமே அமையப்பெற்ற ஜெயகாந்தன் அவர்களின் படைப்பே, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இவரின் படைப்புகளின் சிறப்பு பற்றி எனக்கு பெரிதும் அறிமுகம் இல்லாத போதிலும், நான் ஒரு வாசகராக இவரது படைப்புகளை தேடி திரிந்த நாட்கள் என் நினைவுக்கு வருகின்றன… என்னை தேடுவதை விட்டு விட்டு வாழ்க்கையை சிறிது வாழ்ந்து விட்டு என்னை சந்தித்து பார் இப்போது உனக்கு நான் விளங்குவேன் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது இவரின் இந்த படைப்பை வாசிக்கும் முன்பு வரை! இறுதியில் நான் இங்கே, மதிப்புரையில் எனது முதல் ஜெயகாந்தன் அவர்களின் படைப்பினை வார்த்தைகளால் விமர்சனம் செய்ய தகுதியின்றி ஒருவித தயக்கத்துடன் எழுதுகிறேன்.
கங்கா, முதன்மை கதாப்பாத்திரம், 29 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் கதை. 1970 கால கட்டத்தில் எழுத பெற்ற இப்புத்தகம், இக்காலத்திலும் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பல விமர்சனங்களை முன்வைக்கும் வகையிலும் கதை களத்தை கொண்டது. கடந்த காலத்தில் தனது அசட்டுத்தனத்தால் கங்கா-வின் வாழ்வில் ஏற்பட்ட சலனத்தையும் அதன் பின் அவள் வாழ்வில் திசை மாறிய படகாய் பயணம் செய்ய வைக்கிறார், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது அசட்டுத்தனத்தால் நடந்தவையை காலம் தன் கண் முன் ஒரு சிறுகதையில் மாறுபட்ட கருத்துகளுடைய முடிவு மற்றும் தேடலின் ஓர் ஆரம்பமே கங்கா-வின் நிகழ்கால கதையாக அமைகிறது. அந்த ஒரு நாளில் தனக்கு ஏற்பட்ட சலனத்தையும் அவப்பெயரையும் தன் வாழ்வில் தொடர்ந்து வர, ஒரு கட்டத்தில் வெறுப்பின் வெளிப்பாடாக கதையின் நிகழ்வுகளாக அமைத்துள்ளார் ஆசிரியர்.
பெரியவர்களின் முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளையும் இளம் வயதினர்களின் கால சூழ்நிலையின் முற்போக்கு சிந்தனைகளையும் நடுத்தர வயதினரின் நடுநிலை அற்ற செயல்களையும் சிரமமின்றி கதைக்களத்தில் இயல்பாக காணமுடிகிறது.
கங்கா-வின் கதாப்பாத்திரம் ஒவ்வொரு பெண்களின் ஆழ்மனதின் குமுறல்களின் பிம்பமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில் தனது வாழ்க்கையில் எடுக்கும் ஒரு முடிவானது தன்னை எடுத்து செல்லும் பாதைக்கு தானே வழிப்போக்கன் என்றே கூறலாம். என்னதான் பாதையின் திசைக்காட்டி மற்றவர்களாக இருந்தாலும் பாதையை தீர்மானிக்கும் முடிவு என்றுமே ஒருவரின் தனிப்பட்ட நிலையை சார்ந்தது.
சமுதாயத்தில் ஒரு பெண் சுயமாக தன் வாழ்க்கையை ஒரு ஆண் என்பவனின் துணை இல்லாமல் நடத்தி வரும் போது, அதுவே அவளை சமூகத்தின் பழிச்சொல்லுக்கும் இழிவு பேச்சுக்கும் ஒரு காரணியாக சித்தரிக்கப்படுகிறது. சிலர் அவளை ஒரு போட்டியாகவும், சிலர் அவள் மீது கொண்ட பொறாமையாலும் இவ்வாறு மற்றவர்களை சமுதாயத்தில் அவர்களின் மன அழுக்கின் பிரதிபலிப்பை காட்ட முயல்கிறார்கள் என்பதே உண்மை.
ஒருவர், பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது ஒரு ஆணாக இருந்தாலும் சரி, தனது கடந்த கால வாழ்க்கையை காரணம் காட்டி திசை மாறி உடன் இருந்தவன் என்னை பழிக்கிறான், ஊரார் என்னை பழிக்கிறான் அதனால் நான் என் மனப்போக்கிலே சென்று கொண்டிருந்தால் வாழ்க்கை நமக்கு நாமே அடையாளம் தெரியாமல் மாறிப் போவதும் உண்டு. அப்படி போகும் பாதை, பாதியில் எந்த திசை என திக்கற்று நிற்காமல் இருப்பதும், உனது முடிவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வது அவசியம் என விளக்குகிறார், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள்.
பன்னிரண்டு கதை மாந்தர்களை கொண்டு எதார்த்தமான நடையில் அமைந்திருந்தாலும், கதை களமும் முதன்மை கதாப்பாத்திரமான கங்கா-வின் வடிவமைப்பும் கதையின் உட்கருவின் தன்மையின் எதார்த்ததையே உணர்த்துவதை தவிர்த்து எந்த கதாப்பாத்திரத்தின் நிலை சரி என்றோ தவறு என்றோ கூற இயலாது. அதற்காக ஒரு சிறிய செயலை வைத்தும் ஒரு கதாபாத்திரத்தின் குணத்தை மதிப்பிடுவதும் சரியன்று.
கதையின் உட்கருவுடன் தனது கருத்தையும் பகிர்ந்து கொண்ட @_itsmesabeer க்கு நன்றி!
பி.கு: இப்புத்தகத்தை பரிசாக அளித்த @bharathikandapudumaipenn_0708 க்கு நன்றி.
Discover more from Dhanu The Literarian
Subscribe to get the latest posts sent to your email.